09 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.136 கோடி அபராதம்
  • பிரபல திருமண சேவை இணைய தளம் ஒன்றிற்கு ஆதரவாக, வலைதளமான கூகுள் தேடு பொறி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. 
  • இந்நிலையில், விசாரணை முடிவில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதியானது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது.
பூமியை கடக்கும் மிகச்சிறிய விண்கல்
  • மிகச்சிறிய விண்கல் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது.15 முதல் 30 மீட்டர் அளவுள்ள அந்த விண்கல் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு பூமியை கடக்கும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இன்று மோடி மூன்று நாடுகள் பயண துவக்கம்
  • பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதன்படி ஜோர்டான் செல்லும் மோடி தலைநகர் அம்மானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனத்தின் ரமல்லாஹ் மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார். 
  • இந்த பயணத்தின் போது பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து பேசுகிறார். பின்னர் பிப். 10-ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இன்று தொடங்குகிறது குளிர்கால ஒலிம்பிக்
  •  தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
  • வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 
  • மொத்தம் 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அல்பென்சியா விளையாட்டுப் பூங்கா, காங்னியுங், போக்வாங், ஜியோங்சியான் ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 
உலக குத்துச்சண்டை தொடர்: இன்று தொடக்கம்
  •  உலக குத்துச்சண்டை தொடர் போட்டிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் "இன்டியன் டைகர்ஸ்' என்ற பெயரில் பங்கேற்கும் இந்திய அணி முதல் ஆட்டத்தில் சனிக்கிழமை கஜகஸ்தானை எதிர்கொள்கிறது. 
ஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா
  • ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மகளிர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது.
  • எனினும், முன்னதாக ஜப்பானுக்கு எதிரான குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-4 என வீழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான மகளிர் ஒற்றையர் சுற்று ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியை வீழ்த்தினார்.