24 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

  • பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம், ஆண்டுதோறும், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முதலீட்டிற்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. 
  • இதன்படி, இந்தாண்டுக்கான பட்டியல், சுவிஸ் நாட்டின், டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில், 46 சதவீதம் பேரின் ஆதரவுடன், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. 33 சதவீதம் பேர் ஆதரவுடன், சீனா இரண்டாவது இடத்தையும், ஜெர்மனி, 20 சதவீத ஆதரவுடன், மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • பிரிட்டன், 15 சதவீதம் பேரின் ஆதரவுடன், நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ள இந்தியாவுக்கு, 9 சதவீதத்தினரின் ஆதரவு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 6வது இடத்திலும், ஜப்பான், 5வது இடத்திலும் இருந்தன.

பெட்ரோல் விலை ரூ.75 டீசல் விலையும் எகிறியது
  • வரலாற்றில் முதல் முறையாக, டீசல் விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், மூன்றரை ஆண்டுகளுக்கு பின், பெட்ரோல் விலையும், லிட்டருக்கு, 75 ரூபாயை தாண்டியது, வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாள் பாஸ் ரூ.100 : மாத கட்டணமும் உயர்வு
  • சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மாதந்தோறும், மாநகர பேருந்தில் விருப்ப பயணம் செல்ல, 1,000 ரூபாயும், ஒரு நாள் பயண கட்டணம், 50 ரூபாயும் நிர்ணயித்து, வழங்கி வந்தது.
  • இதன் மூலம், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், 20ம் தேதி முதல், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. 
  • இதன் எதிரொலியாக, ஒரு நாள் விருப்ப பயண கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்கிறது. அதே போல், மாத கட்டணம், 1,000லிருந்து, 2,000 ரூபாய்க்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
68 ஆண்டுகளுக்கு பின் வரலாறு திரும்புகிறது
  • 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி இந்தியா தனது முதுல் குடியரசு தின விழாவை கொண்டாடியது. அப்போது சிறப்பு விருந்தினராக தென் கிழக்கு ஆசியாவின் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்பட்ட அப்போதைய இந்தோனேசிய பிரதமர் சுகர்னோ, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
  • சுமார் 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். 
போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்கள்
  • இந்திய விமானப் படையில், முதன்முறையாக, போர் விமான பைலட்களாக, அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 
  • இவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முடித்த, அவனி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகியோர், 'மிக் - 21 எஸ்' போர் விமானப் படை பிரிவில் பணியில் சேர்ந்துள்ளனர்.
  • அடுத்த மாதத்தில், இவர்கள் இந்த போர் விமானத்தை தனியாக இயக்க உள்ளனர். தற்போதுள்ள நவீன போர் விமானங்களை விட, மிக் ரக போர் விமானங்களை இயக்குவது மிகவும் கடினம்.
ம.பி., கவர்னராக ஆனந்தி பென் பதவியேற்பு
  • ம.பி., கவர்னராக, பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான, ஆனந்தி பென் படேல், 76, நேற்று பதவி ஏற்றார்.
  • ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கவர்னராக, ராம்நரேஷ் யாதவ் பதவி வகித்தார். 
  • வியாபம் ஊழல் வழக்கில், அவர் பதவி விலகிய பின், குஜராத் கவர்னரான, ஓம்பிரகாஷ் கோஹ்லி, ம.பி., கவர்னர் பொறுப்பை, கூடுதலாக கவனித்தார்.
  • இந்நிலையில், ம.பி., யின் புதிய கவர்னராக, ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டார். 
விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: முதல்வர் வழங்கினார்
  • சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசுகளை வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில கைப்பந்துப் போட்டி: தஞ்சை அணி சாம்பியன்
  • ஈரோட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.
8 விக்கெட்டுகளை வீழ்த்தி போப் சாதனை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு ஆஸி. யு-19 அணி முன்னேற்றம்!
  • யு19 உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 
  • காலிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
  • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 33.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 127 ரன்னில் சுருண்டது.
  • பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. 
  • ஆஸ்திரேலிய வீரர்  போப்பின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போப் 9.4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் யு19 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெயரை போப் பெற்றுள்ளார்.