10 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு: உலகவங்கி தகவல்
- குளோபல் பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவி்ல் நோட்டுஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது.
- தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது. .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம் என்றார்.
ஜனவரி 12-இல் விண்ணில் ஏவப்படுகிறது கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள்!
- ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கார்டோசாட் 2 செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 3 சிறிய வகை செயற்கைக்கோள்களும் 25 நானோ செயற்கைக்கோள்களும் உடன் செலுத்தப்படவுள்ளன.
- இந்தியாவில் இருந்து ஒரு சிறிய வகை செயற்கைக்கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகியனவும் ஏவப்படவுள்ளன. மொத்தம் கார்டோசாட் 2-வுடன் 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
'ஆன்லைன்' திட்டத்தில் 226 படிப்புகள் அறிமுகம்
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 'ஸ்வயம்' மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சிக்கான தேசிய திட்டத்தில், 'ஆன்லைன்' படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- இந்த படிப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து, ஆன்லைன் வழியாக, வீடியோ பதிவுகளாக பதிவேற்றப்படும் பயிற்சிகளை எடுத்து கொள்ளலாம். இறுதியில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டத்தில், தேசிய தொழில் மேம்பாட்டு பயிற்சி படிப்புகளுக்கு, என்.பி.டி.இ.எல்., என்ற இணையதளத்தில், தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் படிப்புகளை நடத்துகின்றன.
- அதில், இந்த ஆண்டுக்கு, 226 ஆன்லைன் படிப்புகளை, சென்னை, ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்கிறது?
- 2018 - 19 ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார்.
- அப்போது நடுத்தர தர மக்கள் பயன்பெரும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரியும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹெச்-1பி விசா கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்கா
- வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிவதற்கு வழிவகுக்கும் ஹெச்1பி விசாக்களை நீட்டிக்கும் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு டிரம்ப் அரசு பரிசீலிக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- இதனால் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
தேசிய, 'கலா உத்சவ்' போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை
- தேசிய அளவிலான, 'கலா உத்சவ்' போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- இந்த ஆண்டுக்கான தேசிய போட்டி, கடந்த, 3 முதல், 6ம் தேதி வரை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடத்தப்பட்டது.
- இதில், தமிழகத்தில் இருந்து, நடன போட்டியில் திருச்சி; இசையில், நாகை; நாடகத்தில், திருவண்ணாமலை மற்றும் காண்கலையில், திருச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில், இசை போட்டியில் பங்கேற்ற, நாகை மாவட்ட மாணவர்கள், தேசிய அளவில் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.
- அவர்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வா, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, வெள்ளி கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த குழுவில், மாற்று திறனாளி மாணவர் ஒருவரும் இடம் பெற்றுஉள்ளார்.
- 'கலா உத்சவ்' போட்டி வரலாற்றில், தேசிய அளவிலான போட்டியில், தமிழக மாணவர்கள், இரண்டாம் பரிசு பெற்றது இதுவே முதல்முறை.
ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்
- இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது டாரென் லேமன் உள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக டிராய் கூலே, மற்றொரு பயிற்சியாளராக மாத்யூ மாட் உள்ளனர்.