23 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்


ஜிம்பாப்வே அதிபராக பதவியேற்கிறார் மங்காக்வா

ஹராரே: தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அடுத்த அதிபராக, முன்னாள் துணை அதிபர், எம்மர்சன் மங்காக்வா, 75, நாளை பதவியேற்க உள்ளார்.
தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், 37 ஆண்டுகளாக, ராபர்ட் முகாபே, 93, ஆட்சி புரிந்து வந்தார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழலை எதிர்த்து, பல மாதங்களாக, மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

'பிரம்மோஸ்' சோதனை வெற்றி : விமான படையின் பலம் கூடும்

மிக வேகமாக செல்லக் கூடிய, 'பிரம்மோஸ்' ஏவுகணையை, சுகோய் ரக விமானத்தில் இருந்து செலுத்தி, வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதன் மூலம், விமான படையின் பலம் கூடும்.

நவ., 27ல் ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்

ராஜ்நாத்சிங் 3 நாள் பயணமாக வரும் 27ம் தேதி ரஷ்யா செல்கிறார். அவருடன் உயரதிகாரிகள் குழுவும் செல்ல உள்ளது.

ஜனாதிபதி மாளிகையை சுற்றிப்பார்க்கலாம்

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் வாரத்தில் 4 நாட்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்திப்பு

புதுடில்லி: நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று(நவ.,23) சந்தித்துப் பேச உள்ளார்.

இரட்டை கோபுர உரிமையாளருக்கு இழப்பீடு

நியூயார்க்: அமெரிக்காவில், 2001, செப். 11ல், அல் - குவைதா பயங்கரவாதிகள், இரண்டு விமானங்களைக் கடத்தி, நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்கள் அமைந்த உலக வர்த்தக மையத்தின் மீது மோதினர். அதில் அந்த கட்டடங்கள் தரைமட்டமாகின; 2,750 பேர் கொல்லப்பட்டனர்.
உலக வர்த்தக மையத்தின் உரிமையாளரான, லேரி சில்வர்ஸ்டைன், இந்த தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன் தான், அவற்றுக்கு காப்பீடு செய்திருந்தார்.
அதன்படி, காப்பீட்டு நிறுவனங்களுடன் நடத்திய பலகட்ட பேச்சுக்களுக்குப் பின், 29 ஆயிரத்து, 502 கோடி ரூபாய் இழப்பீடாகக் கிடைத்தது. பல கட்ட பேச்சுக்கு பின், 620 கோடி ரூபாய் தருவதற்கு விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதை லேரி சில்வர்ஸ்டைன் ஏற்றுள்ளார்.

ஹாங்காங் ஓபன்: சாய்னா, சிந்து முன்னேற்றம்

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

சேலஞ்சர் டென்னிஸ்: காலிறுதியில் பாம்ப்ரி

பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்றுவரும் 5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா உள்பட 5 பேர் முறையே தங்களது எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தனர்.

உலக சாதனை செய்வாரா? செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நெருங்கியுள்ள 12 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, 12 வயது பிரக்ஞானந்தா உலக சாதனை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா அசத்திக்கொண்டிருக்கிறார்.