17 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
கிரெனோபிள்: பூமி தவிர்த்து அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய இடம் பற்றிய தேடல் தொடருகிறது. நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. பூமியின் அளவுடைய கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை வானியியலாளர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த கிரகத்தில் திரவ வடிவிலான நீர் இருக்க கூடும். அதனால் வாழ்வதற்கான சூழல் உள்ளது.அந்த சிவப்பு நட்சத்திரத்தின் பெயர் ராஸ் 128. இந்த நட்சத்திரத்தினை ஒரே ஒரு கிரகம் சுற்றி வருகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு முன் டிரேப்பிஸ்ட் 1 என்ற சிவப்பு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அது பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவு கொண்டது.
குற்றவாளிகளை எளிதில் பிடிக்க புதிய ‛ஆப்' ; 15 நாளில் 8 பேர் சிக்கினர்
சென்னை: தேடப்படும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க, புதிய செல்போன் ‛ஆப்' வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை செயல்பாட்டின் போதே 8 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானியின் குடும்பம், ஆசிய பணக்கார குடும்பங்கள் பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
காற்று மாசுபாடு : இந்தியாவிற்கு முதலிடம்
புதுடில்லி : சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த விபரம் வெளியாகியுள்ளது.
டிச.,1 ல் இந்தியா வருகிறார் ஒபாமா
புதுடில்லி : அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா டிசம்பர் 1 ம் தேதியன்று இந்தியா வர உள்ளார். ஒபாமா பவுண்டேஷன் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர உள்ளார். இந்தியாவை தொடர்ந்து ஜெர்மனி, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இந்த ஆண்டு, ஒபாமா செல்ல உள்ளார்.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் இன்று துவக்கம்
கொச்சி: இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் நான்காவது சீசன் கொச்சியில் இன்று(நவ.,17) துவங்குகிறது. முதல் மோதலில் ‛நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி கேரளாவை சந்திக்கிறது.
தேசிய மல்யுத்தம் வினேஷ், ரிதுவுக்கு தங்கம்
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், சகோதரிகளான வினேஷ் போகத், ரிது போகத் தங்கப் பதக்கம் வென்றனர்.
இன்று
1989 நவம்பர் 17
பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன், திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். இவர், 'வாராய் நீ வாராய்...' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். மாயா பஜார் என்ற படத்தில், 'கல்யாண சமையல் சாதம்...' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியவர்.திருச்சி லோகநாதன், சம்பள விஷயத்தில் கறார் பேர் வழி. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி படத்தில் இடம்பெற்ற, எட்டு பாடல்களையும் பாட, வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடலுக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தினர். அப்போது, 'மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்; அவரை பாடச் சொல்லுங்கள்' என கூறி விட்டார், திருச்சி லோகநாதன். அவர் சுட்டிக்காட்டிய, டி.எம்.சவுந்தரராஜன் சகாப்தமாக உருவாகினார். திருச்சி லோகநாதன், ௧௯௮௯ நவ., 17 ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.