15 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்றார்
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ள, கென்னத் ஜஸ்டர், 62, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், விரைவில் இந்தியா வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, ரிச்சர்ட் வர்மா இருந்தார். அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். ஜன., முதல், இந்த பதவி காலியாக இருந்தது.இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, கென்னத் ஜஸ்டரை நியமிக்க, அமெரிக்க பார்லி., சமீபத்தில் ஒப்புதல் 

அளித்தது. அதன்படி, நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு, துணை அதிபர், மைக் பென்ஸ், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


விசா விதிகள் : ஜப்பான் தாராளம்
டோக்கியோ : ஜப்பான் துாதரகம் அறிக்கை: இந்தியர்கள், ஜப்பானில் தொழில் புரியவும், இங்கு வந்து கல்வி பயிலவும் ஏதுவாக அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. 'சிங்கிள் என்ட்ரி' விசா மற்றும், 'மல்டிபுள் என்ட்ரி' விசா என, இரு வகை விசாக்கள் உள்ளன. புதிய விதிகளின் படி, மல்டிபுள் என்ட்ரி விசா காலத்தை, 5 ஆண்டுகளாகவும், ஒரு முறை வரும்போது, அதிகபட்சம், 90 நாட்கள் தங்கும் வகையிலும், விதிகளில் திருத்தம் செய்யப்படும். விசா விதிகள் தளர்வோடு இல்லாமல், விசா கோரி விண்ணப்பிக்கையில், அதோடு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். விசா விண்ணப்பத்திற்கான புதிய விதிகள், அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும்.


233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பு; இன்று முதல் அமல்

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யில் 28 சதவீத வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்கள் உட்பட, 233 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று(நவ.,15) முதல் அமலாகிறது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1ல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற நான்கு வரி விகிதங்களில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறையால், சில பொருட்களுக்கான விலை, முந்தைய வரி விதிப்பு முறைகளைவிட அதிகரித்தது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் கடந்த 10ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்று(நவ.,15) முதல் நாடு முழுவதும் அமலாகிறது.

உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை இழந்தது இத்தாலி: 60 ஆண்டுகளில் முதல் முறை

2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணிலேயே ஸ்வீடனிடம் வீழ்ந்தது.

சீன ஓபன்: பிரதான சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி

சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.



மலேஷியாவுக்கான இந்திய தூதர் முதல்வருடன் சந்திப்பு
சென்னை: மலேஷிய நாட்டிற்கான இந்திய துாதர், தமிழக முதல்வர், பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார். மலேஷிய நாட்டின், இந்திய துாதராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மிருதுள்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர், பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, மிருதுள்குமாரின் மனைவி, ஸ்மிதா கோயல், அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இன்று


வி.ஆர்.கிருஷ்ணய்யர், கேரள மாநிலம், பாலக்காட்டில், 1914 நவ., 15 ல் பிறந்தார். சட்டம் பயின்ற அவர், சுதந்திர போராட்ட காலத்தின் போது, பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தினருக்காக வாதாடினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கேரள மாநிலத்தில், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசில், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். வரதட்சணை ஒழிப்பு சட்டத்தை, நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்தார். 1965-ல் அரசியலிலிருந்து விலகி, உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றினார். பத்மவிபூஷண் விருது பெற்றவர். 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2014, டிச., 4ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.