13 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்

யுனெஸ்கோவில் இருந்து விலகல்: அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு

வாஷிங்டன்: ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜப்பான் பார்லிமென்ட் தேர்தல்: அபேவுக்கு வெற்றி வாய்ப்பு

டோக்கியோ: 'ஜப்பான் பார்லி., தேர்தலில், பிரதமர், ஷின்சோ அபே தலைமையிலான, ஆளுங்கட்சி கூட்டணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்' என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கலெக்டர்களுக்கு பசுமை விருது

சென்னை: எட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு, 'பசுமை விருது' வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, சிறப்பாக செயலாற்றும் கலெக்டர்களை ஊக்கப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களை பாராட்டவும், ஆண்டுதோறும், மூன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மூன்று தொழில் நிறுவனங்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'பசுமை விருது' வழங்கப்படுகிறது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் நடால், ஃபெடரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

புரோ கபடி: யு.பி. யோதாவுக்கு 8-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 121-ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 53-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இன்று


1936 அக்டோபர் 13

வீணை இசை கலைஞர் சிட்டிபாபு, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 1936 அக்., 13ல் பிறந்தார். தந்தை செல்லப்பள்ளி ரங்காராவ் ஒருமுறை வீணை வாசித்து கொண்டிருக்கையில், ஐந்து வயது நிரம்பி இருந்த சிட்டிபாபு, தந்தையின் வாசிப்பில் இருந்த தவறைச் சுட்டிக் காட்டினார்.ஈமனி சங்கர சாஸ்திரி என்பவரிடம் வீணை பயிற்சி பெற்றார்; பிரசித்தி பெற்ற கலைஞரானார். திரைப்பட இசைக் குழுக்களிலும் வீணை வாசித்தார். கலைமாமணி, சங்கீத சூடாமணி, சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 1996 பிப்., 9ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

இன்றைய தகவல்


பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா

புதுடில்லி : வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் உள்ளது. உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.