17 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள புல்வாமா என்ற இடத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவத்தில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஆயூப் லேல்ஹாரி என்பவன் இந்திய பாதுகாப்புப் படையால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான்.
தமிழகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளதாக 'சென்னை 2000+' அறக்கட்டளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ் கோரப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவுடன் உடல்தகுதிச் சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது? சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்குக் கூட உடல் தகுதிச் சான்றிதழ் கேட்கும்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு உடல் தகுதிச் சான்றிதழ் ஏன் கேட்கக் கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் கேள்வி எழுப்பினார்.
விளையாட்டு
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து தடைக்குப் பிறகு சர்வதேச டென்னிஸுக்கு திரும்பிய ஷரபோவா விளையாடவுள்ள முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இது.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்-ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.
இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.